ஒரு நியூட்டன் விதி :
"ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஆற்றலை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றலாம்."
மனிதர்களின் விருப்பங்களும் ரசனைகளும் கூட இதே போலத்தான் போலிருக்கிறது. காலம் எவ்வளவு மாறினாலும் சில விஷயங்கள் மீதான நம் ஆர்வம் புதிய விதமான வடிவங்களில் அப்படியே தொடர்கிறது.
இந்த நூற்றாண்டில் வெளிவந்த இணைய விளையாட்டுகளிலேயே ஜாம்பவானாகத் திகழும் Desktop Tower Defense பற்றிய ஒரு அலசல் தான் இந்த பதிவு.
ஆல்கஹாலைப் போல ஒரு மனிதனை அடிமையாகச் செய்யும் தன்மையை இந்த விளையாட்டு கொண்டிருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள் சில உளவியலாளர்கள். நான் கூட ஆபிஸில் Tea டயத்தில் கூட எந்திரிக்காமல் உட்கார்ந்து விளையாடி கொண்டிருப்பேன்.
(தம்பி! டீ இன்னும் வரலை)
அப்படி என்ன இந்த விளையாட்டில் இருக்கிறது?
குழந்தைகள் கூட எளிதாக புரிந்துகொள்ளும் தன்மையுடன் இருப்பதும் , அதீத புத்திசாலித்தனமான வடிவமைப்பும், போர் மீதான தனி மனிதனின் ஆர்வமும் தான்.
போர் என்றவுடன் ரத்தத்தை நினைவு கூராதீர்கள். இந்த விளையாட்டில் அது துளியும் இல்லை.
Desktop Tower Defense -ன் கரு : உங்கள் கோட்டைக்குள் கொத்து கொத்தாக எதிரிகள் படையெடுக்கிறார்கள். ஒவ்வொரு படையும் ஒவ்வொரு வகையான பலத்தன்மை கொண்டது. அந்த எதிரிப் படை கோட்டையின் மறுபக்கத்தை அடைய விடாமல் அவர்களின் கதையை முடிக்க வேண்டும்.
சரி. இந்த விளையாட்டில் உங்களின் வேலை என்ன?
துப்பாக்கியெடுத்து டுப் டுப்பென்று சுட வேண்டும் என்று நினைத்தீர்களானால் ரொம்ப தப்பு. உங்களின் வேலை ஒரு சரியான போர் வியூகத்தை உடனுக்குடன் அமைத்துக் கொண்டே இருப்பது தான். சுடுவதையெல்லாம் அவர்கள் பார்த்து கொள்வார்கள்.
போர் வியூகம் அமைக்க உங்களிடம் பல வகையான பீரங்கிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பீரங்கியும் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும். அவை எல்லாவற்றையும் இங்கே சொல்ல ஆரம்பித்தால் இந்த நூற்றாண்டின் நீளமான பதிவாக இந்த பதிவு மாறி விடும் அபாயம் இருக்கிறது. நிற்க.
முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பீரங்கியும் ஒரு குறிப்பிட்ட தங்க டாலர்கள் மதிப்பு கொண்டது. தங்கத்திற்கு எங்கே போவது? நீங்க எங்கேயும் போக வேண்டாம். விளையாட்டு தொடங்கும் போதே உங்களிடம் 80 டாலர்கள் இருக்கும். விளையாட்டில் எதிரி படைகளை அழிக்க அழிக்க உங்களின் டாலர் மதிப்பு ஏறிக் கொண்டே செல்லும். உங்களின் கையிருப்பை திரையின் மேல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் காணலாம்.
அதே மாதிரி உங்களிடம் இருந்து எத்தனை பேர் தப்பித்து போகிறார்கள் என்பதை மேலே சிவப்பு வண்ணத்தில் காணலாம்.
எப்படி விளையாடுவது?
- விளையாட்டு தொடங்கும் போது Easy, Medium, Hard, Challenge என தோன்றும் பொழுது Easy என்று தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். (உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.)
- வலது பக்கம் இருக்கும் பீரங்கிகளில் ஒன்றை கிளிக்கி தேர்ந்தெடுக்கவும். பின்னர் நம்முடைய களத்தில் தேவையான இடத்தில் வைத்து கிளிக்கினால் பீரங்கியை அந்த இடத்தில் வைக்கலாம்.
- சில நேரங்களில் ஒரு பீரங்கியின் மேல் அதே பீரங்கியை வைக்கலாம். இதனால் அதனுடைய வீரியம் அதிகரிக்கும்.
- உங்களின் கையிருப்பு டாலர்களை கணக்கில் கொண்டு எவ்வளவு சக்தியான பீரங்கிகளை கிளிக்குவது என முடிவு செய்ய வேண்டும்.
- அதே மாதிரி வெளியே செல்லும் பாதையை அடைக்கும் வகையில் உங்களால் எந்த இடத்திலும் பீரங்கிகளை அடுக்கி வைக்க முடியாது.
இந்த விளையாட்டை பொறுத்தவரை எவ்வளவு நேரம் களத்தில்(?!) தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதில் தான் உங்கள் ஆளுமை அடங்கியிருக்கிறது. அதிக நேரம் விளையாட மகாபாரதத்தில் வரும் சக்கர வியூகம் மாதிரியான விஷயங்கள் எல்லாம் பண்ண வேண்டியதிருக்கும்.
லின்க் : http://www.6to60.com/games/9690-Desktop%20Tower%20Defense.html
விளையாடி விட்டு உங்கள் அதிகபட்ச Score-ஐ இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக